முஸ்லீம் மாணவரான குல்சார் அகமது, சமஸ்கிருதப் பாடத்தில் 100க்கு நூறு வாங்கி அசத்தியுள்ளார்.
சென்னை முகப்பேரில் உள்ள டிஏவி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாவது வகுப்பு படித்தவர் குல்சார் அகமது. இவரது பூர்வீகம் கேரளா. குல்சார் அகமது, 10வது வகுப்பில் இரண்டாவது மொழிப் பாடமாக சமஸ்கிருதத்தை தேர்ந்தெடுத்தார். 9ம் வகுப்பிலேயே அவர் சமஸ்கிருதம் படித்தார்.
நேற்று வெளியான பத்தாவது வகுப்பு தேர்வு முடிவுகளில், குல்சாருக்கு சமஸ்கிருதத்தில் 100 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. இந்துக்களின் புனித மொழியாக கருதப்படும் சமஸ்கிருதத்தில், முஸ்லீம் மாணவரான குல்சார் சென்டம் போட்டது சக மாணவர்களுக்கு வியப்பைக் கொடுத்துள்ளது.
இதுகுறித்து குல்சார் கூறுகையில், சமஸ்கிருதம் படிக்க எனக்கு சிரமமாக இல்லை. 8ம் வகுப்பு வரை நான் இந்தி படித்துள்ளேன் என்பதால் சமஸ்கிருதத்தை நான் எளிதாக எதிர்கொள்ள முடிந்தது. இதன் மூலம் எனது மொத்த மதிப்பெண் சராசரி உயர்ந்துள்ளது.
எனக்கு ராமாயணம், மகாபாரதம் முழுமையாகத் தெரியும். 11 வயதாகும்போதே நான் ஆங்கிலத்தில் மகாபாரத்தைப் படித்துள்ளேன்.
எனக்கு மகாபாரத்தில் மிகவும் பிடித்த கேரக்டர் அர்ஜூனன்தான் என்றார் குல்சார்.
சமஸ்கிருதத்தில் சென்டம் போட்டுள்ள குல்சார், தனது மத பழக்கங்களிலும் அதிக நம்பிக்கை கொண்டவராம்.
இதுகுறித்து குல்சாரின் தந்தை அப்துல் ஹமீது கூறுகையில், குல்சார் தினசரி தொழுகை நடத்தத் தவற மாட்டார். நான் கூட சில நேரங்களில் செய்ய மாட்டேன். ஆனால் குல்சார் அப்படி இல்லை. தவறாமல் தொழுகை செய்வார் என்றார்.
No comments:
Post a Comment